சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்!
வட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா சிவபுரத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2015 இல் ஆட்சி மாற்றம் ஒன்றைக்கொண்டு வந்தது.
எந்த நிபந்தனையும் இல்லாமல் 3 வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளது.
மக்கள் விழிப்படையாதவரை ஏமாற்றும் ஒரு கூட்டம் தொடர்ந்தும் ஏமாற்றிக்கொண்டேயிருக்கும்.
எமது கிராமங்கள் அபிவிருத்தி அடைய வேண்டுமாக இருந்தால் அரசாங்கத்துடன் பேரம்பேசாது எதனையும் சாதிக்க முடியாது.
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களும் கடந்த 16 வருடங்களாக மக்களை புறந்தள்ளிவிட்டு சுயநலமாக சென்று கொண்டிருக்கின்றனர்.
ஆகவே அடுத்தது என்ன தெரிவு என மக்கள் கேட்கலாம். அதற்காகவே மாற்றுத்தெரிவொன்று உள்ளது.
வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் அவரது கரங்களை பலப்படுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அவர் எமது மக்களின் தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் இன்றும் உறுதியாக குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்.
ஆகவே அவரது கரங்களை பலப்படுத்தி அடுத்த முக்கிய மாற்று அரசியல் அணியொன்றை உருவாக்குவோம்.
சம்பந்தன் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் அடிமைகளாக அல்லது அரசாங்கத்திற்கு முண்டு கொடுக்கும் ஆட்களாக போகின்றனர் என்பதற்காக நாம் இதில் இருந்து ஒதுங்க முடியாது.
தமிழ் மக்களுக்கு மாற்று அரசியல் தலைமையொன்று தேவை. அதனை நாம் வெகு விரைவில் உங்களது ஒத்துழைப்போடு உருவாக்குவோம்.
அதற்கான வேலைகளை நாம் செய்துகொண்டிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.