சுங்கத் திணைக்கள சாரதிகளுக்கிடையில் கத்திக்குத்து!
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சாரதியாக கடமையாற்றும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியமையினால் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் இருவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட இரண்டு பேரும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் திருகோணமலை அலுவலகத்தில் கடமையாற்றி வரும் சாரதி என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த 2 பேரும் நேற்றிரவு விடுதியில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் கைகலப்பாக மாறியமையாலேயே இக்கத்திகுத்து இடம்பெற்றுள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கத்திக்குத்துக்கு இலக்கான 44 வயதுடைய நபர் திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நெஞ்சு பக்கத்தில் பலத்த காயங்களுக்குள்ளான ஜெயவர்தன சிகிச்சை பெற்று வருவதோடு கத்தியால் குத்தியதாக கூறப்படும் மற்றுமொருவரும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
கத்தியால் குத்திய சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதிவான் எம்.எச். எம்.ஹம்ஸா வைத்தியசாலைக்கு சென்று நேரில் பார்வையிட்டுள்ளதை அடுத்து எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை இக் கத்திக்குத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.