தமிழரின் பழமை வாய்ந்த வரலாற்று மலை பறிபோகும் அபாயம்!

தமிழரின் பழமை வாய்ந்த வரலாற்று மலை பறிபோகும் அபாயம்!

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலைக்கு வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலமையில் 12 மாகாணசபை உறுப்பினர்களின் குழு நேற்று நேரில் விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளை அவதானித்துள்ளனர்.

இதன்போது, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகசபை செயலாளரும், நெடுங்கேணி பிரதேசசபை உறுப்பினருமான தமிழ்செல்வன் கருத்து வெளியிட்டுள்ளார்.

வனவள திணைக்களம் மற்றும் தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றினால், தமிழர் மலையான வெடுக்குநாறி மலை மற்றும் அதனை சூழவுள்ள காடுகள், ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் ஆகியன பறிபோகும் அபாயத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

குறித்த ஆலயம் தமிழர்களுக்கு கிடைத்த சொத்து, அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தமிழ்செல்வன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்,

தமிழர்களின் தொன்மையான வரலாற்று சான்றாதாரங்களை தன்னகத்தே கொண்ட பகுதியாக, வெடுக்குநாறிமலை காணப்படுகின்றது.

இது தமிழர்களுக்கு சொந்தமான பகுதி. இங்கே வனவள திணைக்களம் தற்போது மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைப்பதற்கு முயற்சிக்கின்றது.

ஆனால் தமிழர்களுக்கு சொந்தமான சொத்தை தமிழர்களிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும், மக்கள் தொன்று தொட்டு வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயத்தில் செய்து வந்த வழிபாடுகளை செய்ய ஆவண செய்யவேண்டும் எனவும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு வடமாகாணசபை உடனடியாகவே கடிதம் எழுதவுள்ளதாக கூறியுள்ளார்.

அதனை நடைமுறைப்படுத்த எடுக்கவேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை வடமாகாணசபை உடனடியாக எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலைக்கு செல்லும் பக்தர்கள் நன்மைக்காக மலையில் ஏணி ஒன்றை பொருத்துவதற்கு ஆலய நிர்வாகமும், மக்களும் இணைந்து முயற்சித்துள்ளதாகவும் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net