பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாயாருக்கு எதிராக நீதிமன்றம் நடவடிக்கை!

வவுனியா – செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் வழங்கிவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வதற்கு முயன்றுள்ள தாயும் பிள்ளைகளும் அதிஷ்டவசமாக காப்பாற்றப்பட்டனர்.

இதையடுத்து விஷம் வழங்கி தற்கொலைக்கு முயன்ற தாயாருக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.எஸ்.எம்.என்.தென்னக்கோன் இன்று வவுனியாவில் தற்கொலைகளுக்கு எதிராக இடம்பெற்ற விழிப்புணர்வுக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் 13 பொலிஸ் நிலையங்கள் இயங்கிவருகின்றன.

இந்த பொலிஸ் நிலையங்களிலே கடந்த பத்து மாதங்களுக்குள் இடம்பெற்ற தற்கொலைகள் தொடர்பாக எங்களுக்கு கிடைத்த தற்கொலைகளின் எண்ணிக்கைகளின் தகவல்களின் அடிப்படையில் பெண்கள் 10பேர், ஆண்கள் 12பேர், மொத்தமாக 22பேர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.

இத் தற்கொலை செய்து கொண்டவர்களில் அதிகமானவர்கள் இளவயதினர்.

தற்கொலைக்கு இன்னுமொரு முறையை பயன்படுத்தியிருக்கின்றார்கள். விஷமருந்துகள்.

இதில் செட்டிகுளம் பகுதியில் தாய் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனினும் அதிஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

எங்களுக்கு ஆச்சரியமான விடயம் ஒன்று 14,15,16 வயது சிறுவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். 21 முதல் 25வயதுக்குட்பட்டவர்கள் 8பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

31வயதிலிருந்து 35வயதிற்குட்பட்வர்கள் 7பேர் தற்கொலை செய்துள்ளார்கள். இந்த குறுகிய காலத்திற்குள் 22பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.
வவுனியாவில் உள்ள பொலிஸ் நிலையங்களில் சிறுவர், பெண்கள் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே தற்கொலை செய்து கொள்பவர்கள் எவருடனாவது பேச வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே தற்கொலை செய்து கொள்ள முயன்று வருகின்றார்கள்.

உங்களுக்கு என்ன பிரச்சினைகள் இருந்தாலும் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று உங்களது பிரச்சினைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டுவிட்டுச் செல்லவும். இளம் வயதினரே தற்போது தற்கொலைகள் செய்து கொள்ள முயன்றுவருவது தெரியவந்துள்ளது.

நாங்கள் அனைவரையும் எமது பிள்ளைகள் என்றே நினைத்து கடமையாற்றி வருகின்றோம் எனவே இளம் வயதினர் நீங்கள் எங்களை உங்களது தாய் தந்தையர்கள் என நினைத்து எம்முடன் வந்து கலந்துரையாடவேண்டும் உங்களது பிரச்சினைகளை மனம்விட்டு பேச முன்வரவேண்டும்.

உங்களுக்கு சுகயீனம் ஏதும் இருந்தால் வைத்தியரிடம் சென்று சொல்லவேண்டும் அதேபோல உங்களுக்கு ஏதும் பிரச்சினைகள் இருந்தால் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சொல்லவேண்டும்.

அவ்வாறு வந்து உங்களுடைய பிரச்சினைகளை எம்மிடத்தில் தெரிவிக்கும்போது உங்களுக்கு எங்களால் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும்.

முன்னர் தற்கொலை செய்து கொண்டால் தண்டப்பணம் செலுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டிருந்தது ஆனால் தற்போது அவ்வாறான நிலை இல்லை இதன்காரணமாகவே அனைவரும் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்வருகின்றார்கள்.

அண்மையில் செட்டிகுளம் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் விஷம் அருந்தியுள்ளார்.

அவர்கள் அதிஷ்டவசமாக உயிர் தப்பித்துக்கொண்டார்கள். எனவே அதன் பின்னர் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © 0603 Mukadu · All rights reserved · designed by Speed IT net