எமது பண்டைய நாகரிகத்தை காட்சிப்படுத்தும் கருத்திட்டம்!

‘தமிழர் நாகரீக மையம்’: எமது பண்டைய நாகரிகத்தை காட்சிப்படுத்தும் கருத்திட்டம்!

வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இயங்கும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள தமிழர் நாகரீக மையம் (Tamils’ Civilization Hub)கருத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (18) அம்பாள்புரம், மல்லாவியில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடமாகாணசபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை இணைக்கப்பட்டுள்ளது.

“இன்று காலையில் யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் மரபுரிமைகள் நிலையம் ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றி இருந்தேன்.

எமது பாரம்பரிய பாவனைப்பொருட்கள், தமிழர்களின் அடையாளச் சின்னங்கள் போன்ற பல்வேறு கிடைத்தற்கரிய பொருட்கள் பாதுகாக்கப்பட்டு எமது எதிர்கால சந்ததிக்கு அவற்றை அறிமுகம் செய்வதற்கும் பயன்பாட்டு தேவைகளுக்கு வழங்குவதற்குமான ஒரு செயற்பாடாக ஒரு காட்சியகமாக அந்த மரபுரிமைகள் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இங்கு அமைக்கப்படவிருக்கின்ற தமிழர் நாகரீக மையம் பழந்தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும், பயன்பாட்டு பொருட்களையும் மற்றும் இன்னோரன்ன கலை வடிவங்களையும் தாங்கிய மாதிரிக் கிராமமாக விளங்கவிருக்கின்றது.

இந்த மாதிரிக் கிராமத்தை அமைப்பதற்கு 200 ஏக்கர் நிலம் தேவைப்பட்டபோதும் தற்சமயம் 49 ஏக்கர் விஸ்தீரணமுடைய நிலம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் தமிழர்களின் வாழ்வியல் முறைமைகள் மற்றும் அடையாளங்கள், பாவனைப் பொருட்கள் ஆகியன உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவிருக்கின்றன.

உதாரணமாக எமது பழைய கால கட்டடக் கலையில் நாற்சாரம் வீடு முதன்மை பெற்றிருந்தது.

அவ்வாறான ஒரு வீடு இப் பகுதியில் அமைக்கப்பட்டு அதில் குடியிருப்பாளர்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அவர்களும் குடியிருத்தப்பட்டு காட்சிப்படுத்தப்படுவார்கள் என்று அறிகின்றேன்.

அதேபோன்று கிணற்றில் நீர் அள்ளும் துலா, பழையகால இராட்டினம், எருது மாடுகள் கொண்டு நிலத்தை பண்படுத்துகின்ற ஏர்க் கலப்பைகள் அவற்றின் பாவனைகள், பழையகால போக்குவரத்து முறைமைகள், வண்டில் மாடு, குதிரை வண்டில் போன்றவை, ஏற்றுமுறை நீர்ப்பாசனம் என பல்வேறுபட்ட பழையகால வடிவங்கள் காட்சிப்பொருட்களாக இங்கு அமைக்கப்படவிருக்கின்றன.

அதாவது இவற்றைக் காண வருபவர்கள் பழைய காலத்தினுள் நுழைந்தவாறான ஒரு மனோ நிலையைப் பெற வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

அதேபோன்று உணவுத்தயாரிப்பில் ஆட்டுக்கல் பயன்பாடு, உரல், அம்மி, திருகை, வெற்றிலைத்தட்டம், மூக்குப்பேணி போன்றவற்றின் உபயோகங்களும் அவற்றில் பயன்படுத்தப்பட்ட அறிவியல் தத்துவங்களும் விஞ்ஞான வளர்ச்சிகளும் பார்ப்போருக்கு காட்சிப் பொருட்களாகக் காட்டப்பட்டு அவற்றின் பாவிப்பும் காட்டப்பட இருக்கின்றது.

தமிழ் மக்கள் வாழ்ந்த அன்றைய குடிசை அமைப்பு அவற்றில் பயன்படுத்திய கட்டிடப் பொருட்கள், உள்ளூர்த் தயாரிப்புக்கள் என்பனவும் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.

அவற்றில் உள்ளடக்கப்பட்டிருந்த பரிணாம அமைப்புக்கள் இயற்கைச் சூழலைத்தாங்கக்கூடிய வகையில் மிக நுட்பமாக தயாரிக்கப்பட்டிருந்ததால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் வெப்பம், குளிர் ஆகியவற்றில் இருந்து தாக்குப் பிடிக்கக்கூடிய வகையில் அவை வடிவமைக்கப்பட்டிருந்தன என்று கூறப்படுகிறது.

எமது முன்னோர்கள் “தையும் மாசியும் வையகத்துறங்கு” என்று கூறுவார்கள். அதாவது தை மாதத்திலும் மாசி மாதத்திலும் பெய்கின்ற கடும் பனியில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வைக்கோலினால் வேயப்பட்ட வீட்டினுள் இரவு படுத்து உறங்கு எனப் பொருள்படும். இயற்கையைக் கொண்டே இயற்கையின் சீற்றத்தை அடக்கினார்கள் எம் முன்னோர்கள்.

ஒவ்வொரு காலத்திலும் எமது மக்களின் நாகரீகங்கள் படிப்படியாக மாற்றம்பெற்று வந்தமையை எமது மரபுசார்ந்த வாழ்க்கை முறைகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

எமது இனத்தின் நாகரீகங்கள் எவ்வாறு மாற்றடைந்து வந்துள்ளன என்பதை காட்சிப்படுத்தும் வகையிலும் அவற்றை மாதிரிகளாக அமைத்து அவற்றில் காணப்பட்ட நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையிலும், அம்பாள்புரம் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அமையவிருக்கின்ற தமிழர் நாகரீக மையம் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு விழிப்புணர்வையும் எழுச்சியையும் ஏற்படுத்தவும் நாம் இந்த பவித்திரமான கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளோம்.

நீண்ட வரலாற்றைக் கொண்டதும் நாகரீக வளர்ச்சி பெற்றதுமான தமிழ் இனத்தின் வரலாறுகளும் வாழ்வியல் அடையாளங்களும் போற்றிப் பாதுகாக்கப்படாமையாலும் அவை பற்றிய குறிப்புக்கள் மற்றும் வரலாற்றுச்சுவடிகள் பேணப்படாமையாலும் இன்று தமிழினத்தின் இருப்பும் அதன் தொன்மையும் கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளன.

எனவே எமது அடையாளங்கள் பேணப்படவேண்டும். எமது பண்டைய வாழ்க்கை முறைத் தத்துவங்களும் அவற்றுள் பொதிந்துகிடந்த விஞ்ஞான அறிவியல் தத்துவங்களும் எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் அவை போற்றிப்பாதுகாக்கப்படவேண்டும்.

வெளிநாடுகளில் இவ்வாறான நாகரீக மையங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. மையத்தின் உள்ளே நுழைந்ததும் ஒரு புதிய சூழலுக்குள் நாம் புகுவோம். செயற்கையாக செய்யப்பட்ட மனிதர்கள் இயற்கையாக அங்கு இருந்து வேலை செய்வது போல் நிகழ்வுகள் நடைபெறுவன.

அந்தப் பொம்மை மனிதர்களை கணனி மயப்படுத்தப்பட்ட மின்சக்தி இயக்கும். உதாரணத்திற்கு நாங்கள் அம்மியில் அரைப்பதை வெளிக்காட்ட வேண்டுமென்றால் ஒரு Switch ஐத் திருகியதும் ஒரு பெண் அல்லது ஆண் உண்மையாக அம்மியில் அரைப்பதை தத்ரூபமாகக் காட்டும். உள்ளே ஒரு முழு கிராமமே ஏதேதோ பண்டைய வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகக் காட்டப்படுவன.

அந்த வகையில் கௌரவ கல்வி அமைச்சரின் சிந்தனையில் உதித்த இந்த அற்புதமான செயற்பாடு சிறப்புற அமைய அவருக்கு வாழ்த்துச் சொல்லி அவருக்கு உறுதுணையாக இருந்து செயற்பட்ட அனைவருக்கும் இத்தருணத்தில் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன்“.

Copyright © 7682 Mukadu · All rights reserved · designed by Speed IT net