விடுதலைப்புலிகளின் கை ஓங்க வேண்டும்: டிசம்பரில் வழக்கு!
விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தமைக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு, எதிர்வரும் டிசம்பர் மாதம் 7ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, மன்றில் ஆஜராகியிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினர், விஜயகலா விவகாரம் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்து உரிய அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.
இதன் பிரகாரம், வழக்கை ஒத்திவைத்த நீதவான், அன்றை தினம், சட்டமா அதிபரின் மேற்பார்வை தொடர்பான முன்னேற்ற அறிக்கையை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.