வீர மரணம் என்ற தகுதி விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு!

வீர மரணம் என்ற தகுதி விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு!

புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன். ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய பிரபாகரனுக்கே உண்டு என தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான் தமிழன் என்பதை உலகத்துக்கு எடுத்துக்காட்டியது ஈழ மண்தான் என்றும் அவர் கூறினார்.

ஆகிலன் மாற்றுத்திறன் குழந்தைகளின் கலை நிகழ்வு மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அங்கு மேலும் உரையாற்றிய அவர்,

‘புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன் ஆனால் வீர மரணம் என்ற தகுதி, ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய தலைவர் பிரபாகரனுக்கே உண்டு.

வள்ளுவர் பிறந்தார் பெரிய பெரிய இலக்கிய மேதைகள், கம்பராமாயணம் படைத்தார் தமிழகம் அற்புதமான பூமி ஆனால் தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான் தமிழன் என உலகத்துக்கு எடுத்துக்காட்டியது ஈழ மண்ணாகும்.

பெண் கழுத்து முழுக்க நகை அணிந்து இரவு 12 மணிக்கு வீதியிலே சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புகிறாளே அன்றுதான் இந்த நாட்டுக்கு பெருமையுண்டு சுதந்திரம் உண்டு என மகாத்மா காந்தி அன்று சொன்னார்.

இது இந்தியாவில் நடக்கவில்லை. ஆனால் அவரது கனவை ஈழ மண்ணில் வன்னிப் பிரதேசத்தில் நேரடியாகப் பார்த்தேன். மனிதன் மறைந்து போனாலும் தமது தடையங்களை பதிவுசெய்துவிட்டு செல்ல வேண்டும்.

இது இந்த பூமிக்கு நாம் செலுத்த வேண்டிய வாடகை. எமது பிறப்பில் எமது கலைகளைக் காப்பாற்ற வேண்டும். இந்த மேடையில் கௌரவிக்கப்படவுள்ள கலைஞர்கள் உங்கள் தடங்களைப் பதிவு செய்துள்ளீர்கள்.

ஈழ மண்ணில் அற்புதமான கலைஞர்கள் உள்ளார்கள் பெரிய இலக்கியவாதிகள் உருவாகியுள்ளனர். இயக்குனர் பாலுமகேந்திரா இந்த மண்ணிலிருந்துதான் வந்திருந்தார்.

இங்கு உள்ளவர்களுக்கும் சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் மிகச்சிறந்த கலைஞர்களாக உருவாகுவார்கள்’ என்றார். இந்த நிகவில் 20 மூத்த கலைஞர்களும், ஐந்து இளம் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் மு. கோபாலக்கிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான பாக்கியராஜ், நடிகர் விதார்த், நடிகை நட்சத்திரா, திரைப்பட தொகுப்பாளர் சுரேஸ்காமாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net