இரு பெண்களும் சபரிமலைக்குள் நுழைய முற்பட்டதை ஏற்க முடியாது!

இரு பெண்களும் சபரிமலைக்குள் நுழைய முற்பட்டதை ஏற்க முடியாது!

இந்து மதத்தினரின் உணர்வுபூர்வமான வழிபாட்டு தலங்களுக்கு, நம்பிக்கையில்லாத பிற மதத்தினர் சமூக ஆர்வலர் என்ற பெயரில் செல்வதை ஒருபோதும் ஏற்க முடியாது என பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று(வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கூறிய அவர்,

“இது போன்ற சம்பவங்களினால் பிரச்சினைகளே அதிகரிக்கும். இன்னொரு மதத்தை சார்ந்தவர் தன்னை சமூக ஆர்வலர் எனக் கூறிகொண்டு மற்றொரு மதத்தை சார்ந்தவரின் நம்பிக்கையை சீர்குழைக்கும் வகையில் செயற்படுவது பிரச்சினைகளை அதிகரிக்க செய்யும்” எனக் கூறியுள்ளார்.

கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்குள் அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என, உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

அதனையடுத்து நேற்று முன்தினம் ஆலய நடை திறக்கப்பட்டதும், பெண்கள் பலரும் உட்செல்ல முற்ப்பட்டனர். எனினும் அவர்கள் போராட்டகாரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

ஆயினும் பொலிஸ் பாதுகாப்புடன் உள்நுழைந்து ஆலயத்தை நெருங்கிய ஒரு ஊடகவியலாளர் மற்றும் பெண்ணியவாதி ஆகியோர் ஆலயத்திற்குள் சென்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில், நீதிமன்றின் தீர்ப்பை ஆலய நிர்வாகம் மற்றும் பொராட்டகாரர்கள் மீறவதாக பலர் தமது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில், ஆலயத்திற்குள் பெண்கள் செல்லக்கூடாது என்பது சபரிமலை மரபு என்றும் அதனை பின்பற்றுவது அவசியம் என்றும் மத உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மேலும் பலர் கூறிவருகின்றனர்.

இவ்வாறு ஆலயத்திற்குள் பெண்கள் செல்ல வேண்டாம் என போராடுபவர்களில் பா.ஜ.க.வினரும் உள்ளனர்.

இந்நிலையில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் மேற்படி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net