யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவுதினம் அனுஷ்டிப்பு
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர்களான சுலக்ஷன் மற்றும் கஜன் ஆகியோரின் இரண்டு வருட நினைவுதினம், நேற்று(சனிக்கிழமை) யாழ். பல்கலைக்கழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நினைவுதின நிகழ்வில், இரு மாணவர்களுக்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது.
யாழ். பல்லைக்கழகத்தில் கல்விகற்று வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த கஜன் மற்றும் சுலக்ஷன் ஆகிய இரு மாணவர்கள், கடந்த 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி கொக்குவில் குளப்பிட்டி பிரதேசத்தில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தை உலுக்கிய குறித்த கொலைச் சம்பவம் மக்களிடையே பாரிய அதிர்ச்சியை தோற்றுவித்த நிலையில், சம்பவ வேளையில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் ஐவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இச் சம்பவத்தை ஒரு விபத்தென பொலிஸார் குறிப்பிட்டிருந்த போதிலும், மாணவனின் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ரவை, இதனை கொலையென உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், கஜன் எனும் மாணவன் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அதனைக் கண்ட சக மாணவனான சுலக்ஷனை பொலிஸார் அடித்துக்கொன்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
சம்பவம் தொடர்பான விசாரணை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.