புலிகளின் சின்னத்துடன் தமிழ் மக்கள் பேரவையின் அழைப்பிதழ்?
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கான அழைப்பிதழில் தமிழீழ விடுதலை புலிகளின் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கின்றமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டமும் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரனின் அரசியல் பிரவேச அடுத்த கட்ட அறிவிப்பும் நாளை மறுதினம் (புதன் கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பு தமிழ் மக்கள் பேரவையால் பலருக்கும் விடுக்கப்பட்டுள்ள நிலையிலேயே குறித்த அழைப்பிதழும் அனுப்பப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
“மாபெரும் எழுச்சி தலைவன் வழியில் மக்கள் மேலவைத் தலைவன் கைகளைப் பலப்படுத்துவோம்“ என்ற தொணிப் பொருளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் விடுதலைப் புலிகளின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் ஆதவன் செய்திச் சேவை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தருமான சுரேஸ் பிரேமச்சந்திரனை தொடர்பு கொண்டு வினவியது.
தமிழ் மக்கள் பேரவையின் நிகழ்வுகளை குழப்பும் வகையில் இந்த அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அவர், இதுவரையில் குறித்த அழைப்பிதழை தான் பார்க்கவில்லை எனவும் தெரிவித்தார்.