முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை!

முள்ளிக்குளத்தில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்கு செல்வதற்கு கடற்படையினர் தடை!

அண்மையில் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை கடற்படையினர் முடியதால் கடற்படையினருக்கும், முள்ளிக்குளம் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்படை முகாமினூடாக முள்ளிக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான வீதியை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்படையினர் மூடியதாலேயே இருதரப்பினருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோரான்ஸ் லியோ தெரிவிக்கையில்,

“முள்ளிக்குளம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்ட சுமார் 77 ஏக்கர் காணியில் மக்கள் பராமரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நேற்று முதல் மக்கள் குறித்த வீதியூடாக பயணம் செய்ய முடியாத நிலையை கடற்படையினர் ஏற்படுத்தி இருந்தனர்.

இந்த நிலையில் முள்ளிக்குளம் ஆலயத்தில் நேற்று காலை திருப்பலி நிறைவடைந்த நிலையில் மக்கள் மீண்டும் திரும்பிச் செல்லுகின்ற போது கடற்படை முகாமில் இருந்த கடற்படையினர் குறித்த வீதியால் சென்ற மக்களை இடைமறித்து விட்டார்கள்.

இதனையடுத்து இருதரப்பினருக்குமிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து அப்பிரதேசத்தில் சிறிது பதற்றநிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அப்பிரதேசத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் ஆகியோரிடம் இச்சம்பவம் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

ஆனால் உயர் அதிகாரியிடம் இருந்து வந்த உத்தரவிற்கு அமைவாகவே குறித்த பாதைகளை மூடியதாக தெரிவித்த கடற்படையினர் மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து மூடி வைத்திருத்த வீதிகளை மீண்டும் மக்களின் பாவனைக்காக கடற்படையினர் திறந்து விட்டுள்ளனர்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 9028 Mukadu · All rights reserved · designed by Speed IT net