தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகமாட்டேன்!
ஒற்றுமையீனத்தின் சின்னமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று பல பிரிவுகளாக பிளவடைந்து காணப்படுவதாகவும், எனினும் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகப் போவமதில்லையென்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நாளை (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
அது தொடர்பாக தமது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டபோது 30 உறுப்பினர்களுடன் 4 பங்காளிக் கட்சிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபையில் ஆட்சியமைத்தது.
இன்று அது மூன்று பங்காளிக் கட்சிகளுடன் காணப்படுவதாகவும், மேலும் பல முரண்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வடக்கு மாகாண சபைக்குள்ளேயே பல கட்சிகளும் அமைப்புகளும் இவ்வாறு தோன்றியுள்ள நிலையில், எதிர்காலத்தில் மேலும் பலர் கட்சிமாறி, புதிய கட்சிகள் உருவாகும் நிலை ஏற்படுமென சீ.வீ.கே.சிவஞானம் மேலும் தெரிவித்துள்ளார்.