நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார்!

நம்பிக்கையில்லா பிரேரணையிலிருந்து விக்கியை சம்பந்தனே காப்பாற்றினார்!

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மக்கள் போராட்டங்களால் கைவிடப்படவில்லை.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனின் இராஜதந்திர நடவடிக்கைகளாலேயே கைவிடப்பட்டது என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடமாகாணசபையின் இறுதி அமர்வு (செவ்வாய்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அமைச்சர் சபை குழப்பங்கள் நடந்த பின்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் செல்வதற்காக நான் புகையிரதத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளதாக நான் அறிந்தேன்.

உடனடியாக அனுராதபுரத்தில் இறங்கி யாழ்ப்பாணம் வந்து முதலமைச்சர் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது என உறுப்பினர்களிடம் கையொப்பம் பெற்று ஆளுநரிடம் சமர்பித்தோம்.

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்தப்பட்டிருந்தால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தோற்றிருப்பார். அது எனக்கு நிச்சயமாக தெரியும்.

ஆனால் எதிர்கட்சி தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் என்னை தொலைபேசியில் பல தடவைகள் தொடர்பு கொண்டு பேசி அந்த பிரச்சினையை சுமுகமாக தீருங்கள். அவ்வாறு தீர்ப்பதற்கு உங்களால் முடியும் என கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தனையும் என்னோடு இணைத்து முதலமைச்சருடன் பல தடவைகள் பேசி, சர்வமத தலைவர்களை சந்திக்க வைத்து அந்த பிரச்சினையை சுமூகமாக தீர்த்துவைத்தோம்.

முதலமைச்சருக்கு ஆதரவாக மக்கள் குறிப்பாக இளைஞர்கள் போராட்டம் நடாத்தியது உண்மை. ஆனால் அதனால்தான் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்றதாக நான் ஒருபோதும் கூறப்போவதில்லை.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் மேற்கொண்டிருந்த இராஜதந்திர நடவடிக்கைகளாலேயே அது தோல்வியடைந்தது. இதேசமயம் அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்க சிலர் முயற்சித்தார்கள்.

நான் அப்போது கூறினேன் நிச்சயமாக நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கும். அவை தலைவர் அதிக வாக்குகளால் வெற்றி பெறுவார். ஆகவே அதனை கைவிடுங்கள் என கேட்டு நிறுத்தினேன்“ என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net