வரதட்சணை கொடுக்காததால் ஒன்றரை இலட்சத்துக்கு விற்கப்பட்ட மருமகள்கள்!

வரதட்சணை கொடுக்காததால் ஒன்றரை இலட்சத்துக்கு விற்கப்பட்ட மருமகள்கள்!

வரதட்சணை கொடுக்காத காராணத்தால் மருமகள்களை ரூ1.50 இலட்சத்திற்கு விற்பனை செய்த மாமனார் மற்றும் மாமியார் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்களின் முறைப்பாட்டிற்கமையவே அண்மையில் இவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்யப்பட்டதோடு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் தெரியவருவதாவது, ராஜஸ்தானைச் சேர்ந்த நிர்மலா, சர்மிளா ஆகிய இரு சகோதரிகளும் மும்பை, விராரைச் சேர்ந்த சகோதரர்களான சஞ்சய் ராவல் மற்றும் வருண் ராவல் ஆகிய இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டனர்.

திருமணமான ஆறு மாதத்தில் அவர்களிடம் கணவன் வீட்டார் ரூ.9 இலட்சம் வரதட்சணை வாங்கிவரும்படி சித்திரவதை செய்தனர். அவர்கள் தங்களது பெற்றோரிடம் சொல்லி ரூ.5 இலட்சம் வாங்கிக்கொடுத்தனர்.

ஆனால் மேலும் ரூ.5 இலட்சம் வாங்கி வரும்படி கட்டாயப்படுத்தி சித்திரவதை செய்தனர். ஆனால் அவர்கள் வரதட்சணை வாங்கி வரவில்லை. இதனால் இரண்டு மருமகள்களையும் கணவன் வீட்டார் அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர்.

அதோடு இரு மருமகள்களையும் ராஜஸ்தானில் உள்ள பிந்த்வாரே நகருக்கு அழைத்துச் சென்று அங்கு அடைத்துவைத்தனர்.

10 நாட்களுக்கு பின்னர் இருவரையும் அடையாளம் தெரியாத ஒருவருடன் மும்பைக்கு அனுப்பிவைத்தனர்.

குறித்த நபர், ‘‘உங்களை ரூ1.50 இலட்சத்திற்கு விலைக்கு வாங்கியள்ளேன். அதனை வசூலிக்கும் வரை உங்களை விடமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், அந்த நபரிடமிருந்து தப்பித்து வந்து, பொலிஸில் முறைப்பாடுசெய்தனர்.

இதனையடுத்தே, அப்பெண்களின் கணவன்மார், மாமனார் மோகன்லால், மாமியார் லீலாதேவி மற்றும் உறவினர்கள் உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றவருகின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net