கடுகதி புகையிரதம் மீது கல்வீச்சு: படுகாயமடைந்த யாழ். முதியவர் இரு மாதங்களின் பின் பலி!

கடுகதி புகையிரதம் மீது கல்வீச்சு: படுகாயமடைந்த யாழ். முதியவர் இரு மாதங்களின் பின் பலி!

கடந்த ஆகஸ்ட் மாதம்- 29 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த கடுகதி புகையிரதம் மீது இனம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட கல்லெறித் தாக்குதலில் படுகாயமடைந்து அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்.வடமராட்சி உடுத்துறைப் பகுதியைச் சேர்ந்த முதியவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (28)அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த முதியவர் கடந்த-29.08.2018 அன்று கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மேற்படி புகையிரதத்தில் பயணித்த நிலையில் பிற்பகல்-04 மணிக்கும் 4.30 மணிக்குமிடையில் பரசங்கவெவக்கும் மதவாச்சிக்கும் இடைப்பட்ட பகுதியில் நடாத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் சிக்கி நெற்றியிலும் தலையிலும் படுகாயமடைந்தார்.

இதனையடுத்து அனுராதபுரம் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குத் தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (28) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். உடுத்துறை தெற்கைப் பிறப்பிடமாக கொண்டவரும், குருநாகலைத் தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலசிங்கம் சிவச்செல்வம் (வயது -64) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

அன்னாரின் பூதவுடலை அவரது சொந்தவிடமான வடமராட்சி உடுத்துறையை நோக்கி எடுத்து வருவதற்கான நடவடிக்கைகளில் அவரது உறவினர்கள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயன் தெற்கில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நாளை திங்கட்கிழமை( 29) பிற்பகல்-02 மணியளவில் நடைபெறுமென அவரது மகன் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

மேற்படி முதியவரின் உயிரிழப்பு உடுத்துறைப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, உயிரிழந்த முதியவர் கல் வீச்சுத் தாக்குதலுக்குள்ளாகிய குறித்த பிரதேசத்தில் ஏற்கனவே பல தடவைகள் புகையிரதம் மீது கல்லெறித் தாக்குதல்கள். இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

இந்த நிலையில் குறித்த முதியவர் மீது கல் வீச்சுத் தாக்குதல் நடாத்திய நபர்கள் எவரும் இதுவரை அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்படாதது தொடர்பில் அவரது உறவினர்களும், ஊரவர்களும் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net