ராகுல் காந்தி மீது மானநஷ்ட வழக்கு!
ராகுல் காந்தி மீது மத்திய பிரதேச முதலமைச்சரின் மகன் இன்று மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் குடும்பம் பனாமா போப்பர்ஸ் ஊழலில் சிக்கியுள்ளதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகவே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம், ஜுஹபா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அவரது மகன் கார்த்திகேயா சவுகான் மற்றும் குடும்பத்தினருக்கு பனாமா பேப்பர்ஸ் ஊழல், வியாபம் ஊழல் ஆகியவற்றில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த சிவராஜ் சிங் சவுகான், தவறான தகவலை வெளியிட்டதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, பா.ஜ.க.வினர் ஏராளமான ஊழல்களில் ஈடுபட்டு வருவதால் குழப்பத்தில் மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் குடும்பம் பனாமா பேப்பர்ஸ் ஊழலில் சிக்கியுள்ளதாக குழப்பத்தில் தெரிவித்து விட்டேன்.
பனாமா ஊழலில் அவர்களுக்கு தொடர்பு இல்லை. ஆனால், வியாபம் உள்ளிட்ட சில ஊழல்களில் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு என்று குறிப்பிட்டார்.
இந்நிலையிலேயே கார்த்திகேயா சவுகான் சார்பில் அவரது வழக்கறிஞர் ஷிரிஷ் ஸ்ரீவஸ்தவா இன்று ராகுல் காந்தி மீது மானநஷ்ட வழக்குத் தொடர்ந்துள்ளார்.