டெல்லியில் ஐ.ஏ.எஸ் படித்து வந்த தமிழக மாணவி விடுதியில் தற்கொலை!

டெல்லியில் ஐ.ஏ.எஸ் படித்து வந்த தமிழக மாணவி விடுதியில் தற்கொலை!

டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தங்கி படித்து வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி (20) விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆதாம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள பூ மார்க்கெட்டில் பூ வியாபாரியாக உள்ளார்.

இவரது ஒரே மகள் ஸ்ரீமதி. கலெக்டர் ஆக வேண்டும் என விருப்பப்பட்ட மகளை அவரது தந்தை ஐ.ஏ.எஸ். படிக்க வைத்தார்.

ஸ்ரீமதி டெல்லியில் தங்கி ஐ.ஏ.எஸ் படித்து வந்தார். அங்குள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நள்ளிரவு ஸ்ரீமதி தங்கி உள்ள விடுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற காரணம் உடனடியாக தெரியவில்லை.

ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது பெற்றோருக்கு டெல்லி போலீசார் தெரிவித்தனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர்.

ஐ.ஏ.எஸ் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் உயிரிழந்த ஸ்ரீமதி கடந்த சில நாட்களாக மன உளைச்சலுக்கு உள்ளானவர்போல் காணப்பட்டதாக டெல்லி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை முடிந்து ஸ்ரீமதியின் உடல் அவரது உறவினர்களிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து பதப்படுத்துவதற்காக (எம்பால்மிங்) எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.

எம்பால்மிங் முடிந்த பின்னர் ஸ்ரீமதியின் உடல் தமிழ்நாட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு இன்றிரவுக்குள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Copyright © 5008 Mukadu · All rights reserved · designed by Speed IT net