சம்பந்தனை மஹிந்தவுடன் இணைந்து செயற்படுமாறு இந்தியா வலியுறுத்தல்!
இலங்கையில் உள்ள தமிழ் கட்சிகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படுமாறு பா.ஜ.க.வின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இருவரும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று (வியாழக்கிழமை) அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது,
“பிரதமர் ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட முயற்சிக்கும்படி, இலங்கை தமிழ் சமூகம் மற்றும் அதன் மூத்த மரியாதைக்குரிய தலைவர் சம்பந்தன் அவர்களிடம் நான் வலியுறுத்துகிறேன்.
இதனால் அனைத்தும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிட்டும். இந்த முயற்சிக்கு உதவி தேவைப்பட்டால், அதை நான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்” என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை இந்தியாவுடன் கலந்துரையாடியதன் பின்னரே, தீர்வு குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.