பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு
சபரிமலை கோயில் நடை, சிறப்பு பூஜைகளுக்காக எதிர்வரும் ஐந்தாம் திகதி திறக்கப்படவுள்ளது.
இதனால் இன்று(சனிக்கிழமை) நள்ளிரவு முதல் நவம்பர் ஆறாம் திகதிவரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, மாதாந்திர பூஜைக்காக கடந்த வாரம் திறக்கப்பட்டது.
பெண்களை அனுமதிக்க கேரள அரசு தீவிரம் காட்டிய போதிலும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்காமல் போராட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து கோயிலுக்குள் வர முயன்ற பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதனால், பதற்றமான சூழல் ஏற்பட்டதுடன், சபரிமலை கோயில் திறக்கப்பட்ட ஐந்து நாட்களில் பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் உக்கிரமடைந்தன.
எனினும், கோயிலுக்கு செல்ல முயன்ற பெண்கள் இறுதி வரை அனுமதிக்கப்படவில்லை. இதனை தொடர்ந்து கேரள பொலிஸார் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
இதனிடையே, சபரிமலை கோயில் நடை சிறப்பு பூஜைக்காக நாளை மறுதினம் திறக்கப்படவுள்ளது.
இதனால் இன்று நள்ளிரவு முதல் நவம்பர் ஆறாம் திகதி வரை, பம்பா, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்து பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.