சபரிமலையில் பாதுகாப்பு பணிக்காக பொலிஸார் குவிப்பு!
சபரிமலை கோயில் நடை நாளை (திங்கட்கிழமை) திறக்கப்படுவதனால் பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்து 500 பொலிஸார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாமென உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியா முழுவதிலும் பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அக்கோயிலின் நடை நாளை திறக்கப்படவுள்ளது.
மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஐய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றன.
இதனால், இதுவரை 3,719 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அனைவரின் மீதும் 546 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை நாளை திறக்கப்படவுள்ளமையால் அங்கு ஏராளமான ஐய்யப்ப பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார்கள்.
மேலும், இளம் பெண்களும் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுமென மாநில அரசு அறிவித்துள்ளதுடன் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் நாளை நடை திறப்பின்போது, இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தக்கூடும் என்பதால் சபரிமலையில் நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, ஐய்யப்ப பக்தர்கள் முகத்தை துணியால் மூடிக் கொண்டு செல்லக்கூடாது என்றும் அவ்வாறு சென்றால் அவர்களது முகத்திரையை விலக்கி பொலிஸார் விசாரணைகளை நடத்துவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் 16 மணித்தியாலங்களுக்குள் பக்தர்கள் கோவிலில் இருந்து வர வேண்டும் என்றும் இந்திய பொலிஸால் தெரிவிக்கப்பட்டுள்ளது.