சபரிமலையில் முதல் முறையாக பெண் பொலிஸார் பாதுகாப்பு பணியில்!

சபரிமலையில் முதல் முறையாக பெண் பொலிஸார் பாதுகாப்பு பணியில்!

சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படவுள்ள நிலையில், அப்பகுதியில் பெண் பொலிஸார் முதல் முறையாக பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களும் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்துவதுடன் கண்டனங்களையும் வெளியிட்டு வருகின்றன.

இதேவேளை கடந்த மாதம் கோயில் நடை திறந்தபோது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி கோயிலுக்கு வந்த சில பெண்கள் தடுத்து நிறுத்தப்பட்டமை தொடர்ந்து போராட்டம் மேலும் வலுப்பெற்றது.

இந்நிலையில் மீண்டும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகின்றது.

இதனால் பிரச்சினைகள் தோன்றுவதற்கு வாய்ப்பு உள்ளமையால் பாதுகாப்பு பணிகளுக்காக பெண் பொலிஸார் உட்பட 2,300 க்கும் மேற்பட்ட பொலிஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலவங்கல், நிலக்கல், பம்பை, மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 4325 Mukadu · All rights reserved · designed by Speed IT net