மஹிந்தவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான்!
மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் நேற்று(திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,
‘தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நசிக்கியது மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று கொத்துக்கொத்தாக கொன்று குவித்து விட்டு இன்று அதே தமிழ் மக்களிடம் வந்து தான் ஆட்சியில் இருப்பதற்காக மண்டியிடுகின்றார் முன்னாள் ஜனாதிபதி.
இன்று இலங்கையில் யார் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்ற சக்தியை தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கின்றார்கள்.
இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் மகிந்த அமைச்சுப் பதவி வழங்குவதாகவும் கோடிக்கணக்கில் பணம் வழங்குவதாகவும் பேரம் பேசி வருகின்றார்.
இந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களினதும் மக்களினதும் உயிர்களுக்கு யாரும் விலை பேசமுடியாது. இதற்குப் பரிகாரமாக தமிழ் மக்களினுடை அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வுத்திட்டத்தை வழங்கவண்டும்.
ஆனால் அவ்வாறு தமிழ் மக்களுக்கு ஒருதீர்வை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ச தயாராகவில்லை. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுகின்றார்.
தமிழ் மக்களினடைய இழப்புக்களை ஈடு செய்வதற்கு எவராலும் எந்தவிலையும் பேசமுடியாது.
மாறாக தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையிலே ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.
இதுவே அவர் தமிழ் மக்களுக்கு செய்யும் பரிகாரமாக அமையும். அதைவிடுத்து, தொடர்ந்தும் தமிழ் மக்களை எமாற்றுகின்ற வகையிலேயே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார்’ என தெரிவித்துள்ளார்.