யாழில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தந்தை உயிரிழப்பு!

யாழில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தந்தை உயிரிழப்பு!

வடதமிழீழத்தில் யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் கரவெட்டி துன்னாலையில் தனது 86 வயதில் 05.11.18 அன்று காலமாகியுள்ளார். இவரது இறுதி நிகழ்வு 06.11.18 இன்று நடைபெற்றுள்ளது.

தனது இறுதிக் காலங்களில் மரணம் சம்பவிக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான இராமச்சந்திரனை தேடிக்கண்டறிவதிலும் அவருக்கு நீதி பெற்றுக்கொள்வதிலும் அமரர் சுப்பிரமணியம் விடாமுயற்சியுடன் பாடுபட்டு வந்திருந்தார்.

தனது வயோதிப மனைவி சகிதம் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பற்றி தகவல்களை பகிர்ந்து கொள்வதில் என்றுமே அமரர் சுப்பிரமணியம் பின்னின்றதில்லை. தன்னை தேடி வரும் ஊடக செயற்பாட்டளர்களுடன் தனது மகனது விடுதலைக்காக அவர் நீண்ட பயணத்தை செய்துமிருக்கின்றார்.

தனது மகன் காணாமல் ஆக்கப்பட்ட நாளில் இருந்து அவரை கண்டறிய தேடி அலைந்து பதிலேதும் கிடைக்காமலேயே அவர் இந்த மண்ணிலிருந்து பிரிந்துள்ளார்.

தான் இறப்பதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைப் பார்க்க வேண்டும் என்றும் தனது இறுதிக்கிரியைகளை தனது மகனான இராமச்சந்திரனே முன்னின்று நடத்தவேண்டுமெனவும் அவர் பல தடவை பேசியிருக்கின்றார்.

தனது மகனிற்கான சேமிப்பை தனது மரணத்தின் முன்னராக அவரிடம் கையளிக்கவேண்டுமென்ற அவரது கனவு கடைசிவரை மெய்க்காது போயேவிட்டது.

தமிழர் மக்களது துன்பியல் வாழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்ற போதே இந்த உலகை விட்டு பிரிந்துவிடுவது தொடர்கின்றது.

அதனுள் ஒன்றாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமசந்திரனின் தந்தையார் சுப்பிரமணியத்தின் மரணமும் அமைந்திருக்கின்றது.

2007ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் வடமராட்சியின் துன்னாலை கலிகை சந்தி இலங்கை இராணுவ படைமுகாமில் வைத்து இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலில் ஒரிரு நாட்கள் அவர் தொலைபேசி செயற்பட்டுக் கொண்டிருந்தேயிருந்தது. விசாரணையொன்றிற்காக தான் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையினை அவர் அப்போது பகிர்ந்துள்ளார்.

யாழ்.தினக்குரல் வலம்புரி நாளிதழ்களது பிரதேச செய்தியாளராக பணியாற்றிக் கொண்டிருந்த இராமச்சந்திரன் தொடர்பில் இன்று வரை தகவல்கள் அற்றேயுள்ளது.

வட தமிழீழத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பெற்றோர்கள் 2009 ஆம் ஆண்டின் பின்னர் தங்கள் பிள்ளைகைள தேடிவரும் நிலையில் இவ்வாறான உயிரிழப்பு சம்பவங்களும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net