இரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது.

இரண்டு வருடங்களின் பின் இரணைமடுகுளம் நிரம்பி வருகிறது – பிரதிப் பணிப்பாளர் சுதாகரன்

கடந்த இரண்டு வருடங்களின் பின் கிளிநொச்சி இரணைமடுகுளத்தில் நீர் அதன் கொள்லளவை அடைந்து வருகிறது. என கிளிநொச்சி பிராந்திய பிரதி நீர்ப்பாசனத் திணைக்கள பணிப்பாளர் ந. சுதாகரன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் பெய்த 150 மில்லி மிற்றர் மழை காரணமாக கிளிநொச்சியில் உள்ள குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது எனவும் குறிப்பாக இரணைமடுகுளத்தின் நீரேந்து பகுதிகளில் அதிகளவு மழை காரணமாக இன்று(08) இரணைமடுகுளத்தின் நீர் மட்டம் 26.5 அடியாக காணப்படுகிறது.

மாங்குளம், கனகராயன்குளம், சேமமடுகுளம் போன்ற குளங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது எனவே அக் குளங்கள் வான்பாய்கின்ற போதும் இரணைமடு குளத்திற்கான நீர் வரவு மேலும் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்ட அவர்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் இரண்டாயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கடந்த இரண்டு அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வந்த நிலையிலும் பருவ மழை போதுமானதாக இல்லாததன் காரணமாக கடந்த வருடங்களில் நீர் மட்டம் அதன் கொள்லளவை அடையவில்லை.

2016 ஆம் ஆண்டு நீர் மட்டம் 20 அடியாகவும், 2017 ஆம் 18 அடியாகவும் காணப்பட்டது.

இரணைமடுகுளம் இதுவரை காலமும் 34 அடியாக காணப்பட்டது. தற்போது அபிவிருத்திக்கு பின் 36 அடியாக காணப்படுகிறது.

இதுவரை காலமும் ஒரு இலட்சத்து ஆறாயிரத்து 500 ஏக்கர் அடியாக (131 எம்சிஎம்) காணப்பட்ட நீர் கொள்லளவு தற்போது ஒரு இலட்சத்து 19500 ஏக்கர் அடியாக(147 எம்சிஎம்) அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் குளத்தின் நீர் மட்டம் 36 அடியாக உயரும் போது குளம் இந்த கொள்லளவை அடையும். எனக் குறிப்பிட்ட சுதாகரன்.

இன்னமும் வட கீழ் பருவபெயர்ச்சி மழை ஆரம்பிக்கப்படவில்லை என்றும் தற்போது இடையிட்டு பருவ பெயர்ச்சி மழையே பெய்து வருகிறது என்றும் நவம்பர் அதிக மழையும் டிசம்பர் மாதம் குறைவான மழையும் பெய்யும் வாய்ப்புள்ளதாக வானிலை தகவல்களும் தெரிவிக்கின்றன.

எனவே இரணைமடுகுளம் இவ்வருடம் 36 அடி நீரை எட்டும் என்ற மகிழ்ச்சியான நம்பிக்கைகுண்டு என்றும் தெரிவித்தார்.

அவ்வாறு 36 அடிக்கு நீர் வந்தால் இதுவரை காலமும் இரணைமடுகுளத்தின் கீழ் சராசரி 8500 ஏக்கரில் மேற்கொள்ள்ப்பட்டு வந்த சிறுபோக நெற்செய்கை 12500 ஏக்கராக மாற்றப்படும் என்றும் தெரிவி்த்தார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net