தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.
தமிழகம் முழுவதும் இதுவரை 1700 பேர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பன்றிக்காய்ச்சல் நோயால் இதுவரை 17 பேர் உயிரிழந்துதுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டு 3800 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 1700 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இந்தநிலையில் மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 5 நாட்களில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 35 வீதம் கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும் கூறினார்.
காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நோய் அறிகுறி தெரிந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
காய்ச்சல், நோய்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை தரும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ சபை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராதாகிருஷ்னன் மேலும் தெரிவித்தார்.