மலேசியாவிற்கு கடத்த முயன்ற 300 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

மலேசியாவிற்கு கடத்த முயன்ற 300 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்!

சென்னை காசிமேட்டில் விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்த முயன்ற 300 நட்சத்திர ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்தில் தொடர்புடைய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நட்சத்திர ஆமைகள் கடத்தப்படுவதாக ராயபுரம் உதவி பொலிஸ் ஆனணயாளர் கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

இந்தநிலையில் காசிமேடு மீன்பிடி துறைமுக பொலிஸ் அதிகாரிகள் நேற்று (புதன் கிழமை) இரவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞர்களிடம் காணப்பட்ட அட்டை பெட்டிகளை சோதனை செய்த போது அதில் 300 நட்சத்திர ஆமைகள் மறைத்து வைக்கப்பட்டு, மலேசிய முகவரி ஒட்டப்பட்டும் இருந்தது.

கடல் வழியாக நட்சத்திர ஆமைகளை கடத்திவந்த மர்ம கும்பல் அதனை சென்னையில் இருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு கடத்தவிருந்ததாக விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

நட்சத்திர ஆமைகளை பொலிஸார் பறிமுதல் செய்ததோடு, சந்தேகநபர்களையும் கைதுசெய்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆமைகளின் மதிப்பு சுமார் 71.43 லட்சம் இந்திய ரூபாய் என தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகளை சுங்கத்துறை அதிகாரிகளிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.

தப்பியோடிய கும்பல் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net