காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லியில் கனரக வாகனங்களுக்கு தடை!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுவை கட்டுப்படுத்த கனரக வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும் என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி கனரக வாகனங்கள் டெல்லியில் நுழைவதற்கு
நேற்றிரவு(வியாழக்கிழமை) முதல் மூன்று நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசு உச்சகட்ட அளவை எட்டியிருப்பதால் பெரும் அச்சுறுத்தலாக மறியுள்ளது. வாகன புகையினாலும் காற்றின் தரம் குறைந்து வருகின்றது.
தீபாவளிக்குப் பின் மேலும் மோசமடைந்து, காற்று மாசு படிப்படியாக உயர்ந்து அபாய அளவை தாண்டியுள்ளது.
காற்றின் மாசு அதிகரித்து மிக அபாயகராமான நிலையை அடைந்துள்ள நிலையில், நேற்றிரவு 11 மணி முதல் சரக்கு லொரிகள், டேங்கர் லொரிகள் போன்ற கனரக வாகனங்கள் டெல்லிக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றன.
மேலும் அவை வேறு பகுதிகளுக்குத் திருப்பி விடப்படுகின்றன. டெல்லியின் எல்லைப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் காய்கறிகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் ,பால், பழங்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு இவற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று டெல்லி போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதிக அளவிலான புகையை வெளிப்படுத்தும் மோட்டார் வாகனங்களின் பதிவெண் இரத்து, பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், வீடுகளில் தெய்வ வழிபாட்டுக்கு ஊதுவத்தி கொளுத்துவதைகும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் காற்று மாசு குறையாத காரணத்தால் தற்போது கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.