திருகோணமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
திருகோணமலை மாவட்டத்தில் (நேற்று 08ஆம் திகதி 12 மணி வரைக்கும்) சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 22 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே சுகுணதாஸ் தெரிவித்தார்.
சேருவில பிரதேச செயலகம் கிண்ணியா மற்றும் மூதூர், வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 3 ஆயிரத்து 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் சேருவில பகுதியை சேர்ந்த 108 நபர்கள் அவர்களது உறவினர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் அனர்த்தங்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் மாவட்ட அரச அதிபர் என். ஏ. ஏ. புஷ்பகுமார தலைமையில் விசேட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகொல்லாகமவின் தலைமையில் மற்றுமொரு குழுவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தங்களது பகுதிகளில் காலநிலை சீர்கேடு தொடர்பாக ஏதாவது அசம்பாவிதங்கள் இடம்பெற்றால் உடனடியாக கிராம சேவை உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளருக்கு அறிவிக்குமாறும் திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் திருகோணமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே. சுகுணதாஸ் மேலும் குறிப்பிட்டார்.