பக்திபூர்வமாக ஆரம்பமான கந்தசஸ்டி விரதம்!

பக்திபூர்வமாக ஆரம்பமான கந்தசஸ்டி விரதம்!

கந்தசஸ்டி விரதம் நேற்று நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக ஆரம்பமானது.

சூரபத்மனை முருகப்பெருமான் சம்காரம் செய்த காலத்தில் கந்தசஸ்டி விரதம் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இந்த விரத காலத்தில் அடியார்கள் உபவாசம் இருந்து முருகப்பெருமானை நினைந்து விரதமிருப்பதுடன் ஆலயங்களில் வழிபாடுகளையும் மேற்கொள்வார்கள்.

இந்த கந்தசஸ்டி விரதத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள ஆலயங்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் கந்தசஸ்டி விரதம் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்கள் பூசொரிந்து வழிபடும் நிகழ்வு நடைபெற்றதுடன் கந்தபுராண படலமும் படிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதம்

இந்துக்களின் மிக முக்கிய விரதங்களில் ஒன்றான கேதார கௌரி விரதத்தின் இறுதிநாளான நேற்று அதிகாலை கும்பம் கரைக்கும் நிகழ்வுகள் ஆலயங்களில் நடைபெற்றன.

கடந்த 21 தினங்களாக அனுஸ்டிக்கப்பட்டுவந்த கேதார கௌரி விரதத்தின் மிகமுக்கிய நிகழ்வான காப்பு கட்டும் நிகழ்வு புதன்கிழமை மாலை ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கேதார கௌரி விரதத்ததின் காப்புக்கட்டும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்கள் தலைமையில் இந்த கேதார கௌரிவிரத வழிபாட்டு நிகழ்வுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது விசேட யாகபூஜை மற்றும் விசேட பூஜைகள் நடைபெற்றதுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள கேதாரேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து அடியார்களுக்கு காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றது.

இதேவேளை, கொழும்பு – ஜெயந்திநகர் ஜிந்துபிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும்நேற்று காலை கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகியது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு குறித்த விரதத்தினை கடைப்பிடித்துள்ளனர்.

மேலும், கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதியிலிருக்கும் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோவிலில் வெகு சிறப்பாக கந்தசஷ்டி விரத ஆரம்பம் நடைபெற்றுள்ளது.

இது அனைத்து முருகன் ஆலயங்களிலும் நேற்று ஆரம்பமாகி 13ஆம் திகதி வரை பூஜைகள் நடைபெறும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net