36 மணி நேரமாக அனத்தத்திற்குள் சிக்கியவர்கள் விமானப் படையினரால் மீட்பு!
முல்லைத்தீவு குமுழமுனையில் 36 மணி நேரமாக வெள்ள அனர்த்தத்தில் சிக்கி கடும் முயற்சியெடுத்தும் மீட்க முடியாது பரிதவித்த 6 பேரினை இராணுவத்துடன் இணைந்து விமானப்படையினரால் இன்று காலை 8.30 மணியளவில் அதீத பிரயத்தனத்தின் மத்தியில் மீட்டு கரை சேர்த்தனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
07.11. 2018 அதிகாலை 12.10 மணியளவில் ஏற்பட்ட குமுழமுனை நித்தகை குளம் உடைப்பெடுத்திருந்த பேரனர்த்தத்தின் போது அப்பகுதியில் விவசாய நடவடிக்கைகாக சென்றிருந்தவர்கள் சிக்கியிருந்தனர்.
அவர்களை மீட்டெடுப்பதற்கான முயற்சியினை கிராமத்து இளைஞர்களுடன் ஊடகவியலாளர் பா.சதீஸ், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் இ. மயூரன் ஆகியோரின் அபார முயற்சியினால் முதற்கட்டமாக 9 பேர் மீட்கப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பேரில் சிக்கியவர்களை மீட்க்குமாறு அனர்த்த முகாமைத்துவத்தினருக்கு கோரியும் அவர்கள் இரவு 7.30 மணி வரையும் ஸ்தலத்திற்கு வருகை தரவில்லை.
மீட்பு நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவத் திணைக்களம் உரிய அக்கறை காட்டாது தாமதித்த போதும் இராணுவம், கடற்படை எடுத்த முயற்சி 07.11.2018 அதிகாலை 2 மணிவரை வெற்றியளிக்காமையால் இதை அறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிராம மக்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி நிலவரத்தை அறிந்து தொலைத்தொடர்பு மூலம் இணைப்பு அழைப்பினை (Conference call) முப்படைகளுக்கும் , அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கும் உரிய பணிப்புரைகளை வழங்கி இன்று அதிகாலை விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் மீட்பு நடவடிக்கையை ஒழுங்குபடுத்தியிருந்தார்.
இன்று காலை 6 மணியளவில் சம்பவ இடத்திற்கு அண்மையில் நகர்த்தப்பட்ட இராணுவத்தினரின் உதவியுடன் விமானப்படையின் MI-17 ரக உலங்கு வானூர்தி மூலம் அனர்த்தத்தில் சிக்கிய விவசாயிகளையும் பத்திரமாக மீட்டெடுத்து குமுழமுனையில் தரையிறக்கினர்.