சீரற்ற காலநிலை! வழமைக்குத் திரும்பியது முல்லைத்தீவின் இயல்பு நிலை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வந்த சீரற்ற கால நிலை வழமைக்கு திரும்பி இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் தற்போதை நிலை தொடர்பில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்துவந்த மழை காரணமாக ஆறுவரையான சிறிய குளங்கள் உடைப்பெடுத்திருந்தன.
அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 202 குடும்பங்களை சேர்ந்த 647 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் வெலி ஓயா பிரதேசத்தில் மாத்திரம் இரண்டு குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்காலிக இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலருணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தத்தில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இலங்கை இரானுவத்தினர் விமானப்படையினர் கடற்படையினர் பொதுமக்கள் அதிகாரிகளின் உதவியுடன் மக்களை காக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, ஆண்டான் குளம் பகுதிக்கு அடுத்துள்ள நித்தகைக்குளம் நேற்று முன்தினம் உடைப்பெடுத்திருந்தது.
இதன்போது ஆறு பேர் காணாமல் போயிருந்தனர். மேலும் அனர்த்த முகாமைத்துவக் குழுவினர், முப்படையினர், காவற்றுறையினர் மற்றும் ஊர் மக்கள் என அனைவரும் இணைந்து காணாமல் போன குடும்பத்தை தேடுதல் மேற்கொண்டனர்.
இந் நிலையில் காணாமல் போயிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் ஏனைய மூன்றுபேரும் நேற்று காலை 07.00 மணியளவில் விமானப்படையினர் மற்றும் இரானுவத்தினரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் நிலவிய சீரற்ற கால நிலை வழமைக்கு திரும்பியதுடன் வெள்ளம் நிரம்பிக்கானப்பட்ட தாழ் நிலங்களில் வெள்ளம் குறைவடைந்து இயல்பு நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்-