வவுனியாவில் முன்னாள் போராளியின் வீட்டில் திருடர்கள் கைவரிசை!
வவுனியா கனகராயன்குளம் பகுதியில் முன்னாள் போராளி ஒருவரின் வீட்டை உடைத்து பணம் மற்றும் நகைகள் இன்று கொள்ளையிடப்பட்டுள்ளன.
கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளியான பேரம்பலம் வசந்தகுமார் என்பவரது வீட்டிலேயே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளது.
இதன்போது வீட்டை உடைத்து ஒரு இலட்சத்து 45 ஆயிரம் ரூபா பணம் மற்றும் ஏழு பவுண் நகை, தண்ணீர் இறைக்கும் இயந்திரம், வீட்டு ஆவணங்கள் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் போராளியான பே.வசந்தகுமாரின் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் ஆக்கிரமித்திருக்கும் நபர் ஒருவருக்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கிற்கு முன்னிலையாக சென்றிருந்த நேரத்தை பயன்படுத்திய திருடர்கள் சூட்சுமமான முறையில் வசந்தகுமாரின் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை கொள்ளையடித்துள்ளனர்.
இக்கொள்ளைச்சம்பவம் தொடர்பாக வவுனியா தடவியியல் பொலிசார் மற்றும் கனகராயன்குளம் பொலிசார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.