அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது!
நாட்டில் அரசமைப்பு ஒன்றிருக்கையில் அதனை மீறிச் செயற்பட முடியாது என வட. மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“நாட்டில் அரசமைப்பு ஒன்றிருக்கையில் அதனை மீறிச் செயற்பட முடியாது. ஆனால் அதனை மீறியே தற்துணிவின் அடிப்படையில் ஐனாதிபதி செயற்பட்டிருக்கின்றார்.
ஐனாதிபதியின் இச் செயற்பாடானது ஐனநாயக விரோதச் செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது.
19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதமரை நீக்கும் அதிகாரம் அல்லது நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஐனாதிபதிக்கு கிடையாது.
ஆனால் பொருள் கோடல் என்ற அடிப்படையில் ஐனாதிபதி இதனைச் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. ஆகையினால் இதற்கு எதிராக நீதிமன்றம் செல்வதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்நிலையில் நீதிமன்றம் செல்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு முதல் அதிகாரம் இருக்கின்றது. அதே போன்று ஏனையவர்களும் நீதிமன்றம் செல்ல முடியும்.
இவ்வாறானதொரு சூழ் நிலைமையில் ஐனாதிபதியின் இந்த அறிவிப்புத் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நீதிமன்றத்தை நாடப் போவதாகச் சொல்லியிருக்கின்றமை வரவேற்கத்தக்கது.
ஆகவே ஐனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் திகதியை அறிவித்திருந்தாலும் தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றம் செல்லவுள்ளதால் அந்த திகதிகளில் மாற்றம் ஏற்படக் கூடிய சூழலும் இருக்கின்றது.
அதேநேரம் நீதிமன்றத் தீர்ப்புக்களின் பிரகாரம் ஐனாதிபதியின் இச் செயற்பாடுகள் தவறானவை என்று தெரிவிக்கப்படுகின்ற போது நாடாளுமன்றம் மீளவும் அவ்வாறே இயங்குவதற்கான சந்தரப்பங்களும் காணப்படுகின்றன.
ஆயினும் எது எவ்வாறாக இருந்தாலும் ஐனாதிபதியின் இந்தச் செயற்பாட்டில் வரலாற்று ரீதியான தவறும் நிகழ்ந்துள்ளது. அத்தோடு ஐனநாயக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தவறான முன்னுதாரணமாக இந்தச் செயற்பாடுகள் பதியப்படும்.
இதேவேளை ஐனாதிபதியின் இத்தகைய செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அதாவது புதிய அரசமைப்பு உருவாக்கம் தீர்வு என்ற விடயத்தில் பலரும் இணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் தற்போது கேள்விக்குறியாகியிருக்கின்றன.
இதனால் தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு அப்படியே நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.
ஆகவே இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகளைப் பொறுத்தே எதனையும் கூற முடியும்“ என தெரிவித்துள்ளார்.