பொதுஜன பெரமுனவின் செயற்பாடு மைத்திரியின் இருப்பிற்கு ஆபத்து!

பொதுஜன பெரமுனவின் செயற்பாடு மைத்திரியின் இருப்பிற்கு ஆபத்து!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளமையானது, ஜனாதிபதி மைத்திரிக்கு இருப்பிடமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளமையானது வெற்றியளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்

அலரி மாளிகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட சிலரும் பொதுஜன பெரமுன முன்னணியின் உறுப்புரிமையை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அக்கட்சியிலேயே தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் அறிய முடிகிறது.

அதேபோல் பொலனறுவை மாவட்டத்துக்கான, பொதுஜன முன்னணியின் வாக்காளர் பெயர் விபரம் தயாரிக்கப்பட்டுள்ளதாவும் அந்த பத்திரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்ப உறுப்பினர்களின் பெயரோ அல்லது அவரின் அதரவாளர்களின் பெயர் எவையும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதனால், தற்போது மைத்திரி அணியினர் இருப்பிடம் இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில் மைத்திரி அணி தேர்தலிலும் தோல்வியடையபோவது உறுதியாகிவிட்டது. எவ்வாறாயினும், நடப்பவை அனைத்தும் நன்மைக்கு என்று நாம் கருதுகிறோம். அதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நாளை உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளோம்.

நீதிமன்றத்தின் மீது எமக்கு நம்பிக்கை உள்ளது. நியாயமான தீர்ப்பு கிட்டும் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது” என்றார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net