ஐ.தே.க.வுக்கு கூட்டமைப்பு ஆதரவு இல்லை!
கூட்டமைப்பு ஜனநாயகத்துக்கு எதிராக குரல் கொடுத்துள்ளதே தவிர ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக இல்லையென கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஷ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு இலங்கை தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறியுள்ளதாவது,
“நாம் ஒத்த கருத்தோடு மாத்திரம் செயற்படுகின்றோமே ஒழிய ஐக்கிய தேசிய கட்சிக்கு சார்பாக செயற்பட வேண்டிய அவசியமில்லை.
மேலும் கூட்டமைப்பை பொறுத்தவரை அரசியலமைப்பில் 19ஆவது திருத்தச் சட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீறப்பட்டுள்ளது.
ஆகையால் ஜனநாயகத்துக்கு முரணாக இத்தகைய செயற்பாட்டுக்கு குரல் கொடுத்து ஜனநாயகத்தை பாதுகாப்பது மாத்திரமே எமது கொள்கையாகும்.
அந்தவகையில் நாடாளுமன்றத்தில் பழைய நிலைமைமை மீண்டும் கொண்டு வருவதற்கு ஏற்றவாறு சிறந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டுமென்றே பெரும்பாலான கட்சிகள் வழக்கு தாக்கல் செய்துள்ளன.
அதேபோன்று நாமும் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம்.
மேலும் குறித்த வழக்கினை விசாரணை செய்யும் நீதிபதி, நாட்டின் அரசியல் நிலைமையை சீராக்கும் வகையிலும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலும் தீர்ப்பை வழங்குவாரென நாம் எதிர்பார்க்கின்றோம்.
இதற்காக கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதாக கூறும் கருத்துக்களில் எந்ததொரு உண்மையும் இல்லை” என துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.