காசா எல்லையில் வன்முறை: மூன்று பலஸ்தீனியர்கள் பலி.
காசா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய விமான தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.
பலஸ்தீனியர்கள் நடத்திய பாரிய ரொக்கெட் தாக்குதல்களின் எதிரொலியாக நேற்று (திங்கட்கிழமை) மாலை இஸ்ரேல் படையினரின் விமான தாக்குதல் அரங்கேறியுள்ளது.
காசாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் இரகசிய நடவடிக்கையின்போது ஏழு பலஸ்தீன கிளர்ச்சியாளர்களும், ஒரு இஸ்ரேல் வீரரும் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்தை அடுத்து காசாவில் இஸ்ரேல் படையினருக்கும் பலஸ்தீன கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.
இதன்போது, பலஸ்தீன் கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது 300 ரொக்கெட் மற்றும் மோட்டார் குண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இத்தாக்குதலில் பேருந்தொன்று தீக்கிரையானதுடன், அருகிலிருந்த இஸ்ரேல் படை வீரர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார்.
இதனையடுத்து, பலஸ்தீன் கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் படையினர் 70 விமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இதில் மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், அவர்களில் இருவர் பலஸ்தீன் கிளர்ச்சியாளர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.