கூட்டமைப்பில் இணையும் புதிய கட்சிகள்!
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் புதிய கட்சிகள் அல்லது அமைப்புக்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் இன்னும் சில தினங்களில் தீர்மானிக்கவுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளும் ஐனநாயகப் போராளிகள் அமைப்பினரும் இன்னும் சில தினங்களில் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உணவுப் பொருட்களை சேகரிக்கும் பணியை பருத்தித்துறையில் நேற்று (திங்கட்கிழமை) ஆரம்பித்து வைத்த மாவை சேனாதிராஜாவிடம், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஊடகவியலாளர்கள் வினவினர். அதற்கு பதிலளித்தபோதே மாவை மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பாக நாட்டில் பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், பிரச்சினைகள் தீர்ந்து தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டால் அதுகுறித்து கட்சி ஆராயுமென குறிப்பிட்டார்.
அந்த வகையில் கூட்டமைப்பில் வேறு கட்சிகளை இணைத்துக்கொள்ள முடியுமா என்பது குறித்தும் ஆராய்ந்து அதன் பின்னர் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாக கூடி ஆராயவுள்ளதாக மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.