தீவிரமடைகின்றது கஜா புயல்!

தீவிரமடைகின்றது கஜா புயல்!

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ‘கஜா’ புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது.

மேலும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியபோது,

மத்திய மேற்கு மற்றும் அதை அண்மித்த மத்திய கிழக்கு மற்றும் தெற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ‘கஜா’ புயல் மேற்கு மற்றும் வடமேற்குத் திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு, அதை அண்மித்த மத்திய கிழக்கு தெற்கு வங்கக் கடலில் சென்னைக்கு கிழக்கு, வடகிழக்கே 600 கி.மீ. தொலைவிலும், நாகப்பட்டினத்துக்குக் கிழக்கு, வடகிழக்கே 700 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

மேற்கு, தென்மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்.

தொடர்ந்து மேற்கு, தென்மேற்குத் திசையில் நகரும்போது சற்று வலுவிழந்து மீண்டும் புயலாக மாறி நாளை (வியாழக்கிழமை) பிற்பகலில் பாம்பனுக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக தமிழகத்தில் கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த காரைக்காலிலும் பலத்த காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வரையிலான வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

அத்துடன் பலத்த, மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும். தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் நாளை வேளைகளில் பரவலாக மழை பெய்யக் கூடும்.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில், புயல் காரணமாக கடல் சீற்றமாகக் காணப்படுவதுடன், அலைகள் ஒரு மீட்டர் உயரம் வரை உயரும். மீனவர்கள் நாளை வரை கடலுக்கு செல்ல வேண்டாம்.

புயல் கரையைக் கடக்கும் மாவட்டங்களில் மரங்கள், விழுந்து முறியக்கூடும், வீடுகள், மின்சாரம், தொலைத் தொடர்புகளும் பாதிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net