கஜா புயல் காரணமாக உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக உயர்வு!
தென்னிந்திய கரையோரங்களை கடுமையாக தாக்கிய கஜா புயல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரித்துள்ளது.
சுமார் 100 தொடக்கம் 120 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சமஸ்கிருதத்தில் ‘யானை’ என்ற பொருள்படும் வகையில் இந்த புயலுக்கு கஜா என்று பெயரிடப்பட்டுள்ளது.
நேற்று இரவு 11 மணியளவில் கஜா புயல் தமிழக கரையோரத்தை அடைந்து, நள்ளிரவு 12.30 மணிக்கு புயல் ஆக்ரோஷமான வேகத்துடன் கரையைக் கடக்க ஆரம்பித்தது. வேதாரண்யத்துக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடந்து சென்றது.
புயல் முழுமையாக கரையைக் கடப்பதற்கு சுமார் 6 மணி நேரமாகும் என்று கணிக்கப்பட்டிருந்தது.
அதற்கு ஏற்ப கஜா புயல் வேதாரண்யம் – நாகை இடையே 12.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் மிக பலத்த சூறாவளிக் காற்றுடன் கரையை கடந்தது.
புயலின் மையப் பகுதி ஒரு இடத்தை கடப்பதற்கு சுமார் 2 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இன்று அதிகாலை 3 மணிக்கு புயலின் மையப் பகுதி கடலோரத்தில் இருந்து கடந்து சென்றது.
கஜா புயலின் சீற்றம் காரணமாக சுமார் 2 மணி நேரம் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 7 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
கடலூர், நாகை, காரைக்கால், திருவாரூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்கள், தொலைத் தொடர்பு கம்பங்களும் சரிந்து வீழ்ந்தன.
குறிப்பாக நாகப்பட்டினம் கஜா புயலால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. அங்கு மின்சாரம் சீராகி, மக்களின் இயல்பு நிலை வழமைக்கு திரும்ப இன்னும் இரண்டு நாட்களாகும் என்று கூறப்படுகிறது.