கஜா புயல் : வடமாகாண பாடசாலைகளுக்கான பரீட்சைகள் பிற்போடப்பட்டன!
வடமாகாண பாடசாலைகளில் நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் 27ஆம் திகதி நடத்த வடமாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
வடமாகாணத்திற்கு விடுக்கப்பட்ட கஜா புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, முன் அறிவித்தலின்றி வடமாகாண பாடசாலைகளுக்கு திடீர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், பாடசாலை மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டதுடன், வடமாகாண பாடசாலைகள் சில இயங்கின.
இவ்வாறான நிலைமையில் முன்னறிவித்தலின்றி இன்று காலை 8 மணியளவில் வடமாகாண ஆளுநரினால் விடுக்கப்பட்ட பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவித்தலினால், மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று, மீண்டும் 8 மணியளவில் வீடுதிரும்ப நேரிட்டது.
இதனால், பாடசாலை சமூகத்திற்கிடையே ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக, பாடசாலைகளில் இன்று நடைபெறவிருந்த தவணைப் பரீட்சைகள் அனைத்தும், எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடத்த வடமாகாணத்தில் உள்ள அனைத்து வலயகல்வி பணிமனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்கள் அனைத்தையும், வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்குமாறும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.