கூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாது!
கூட்டமைப்பில் இணைந்தால் மக்களின் தேவைகளை செய்யும் வாய்ப்பு ஒருபோதும் எனக்கு ஏற்படாது. ஆகையால் கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் இல்லையென பிரதியமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்புடன் மீண்டும் வியாழேந்திரன் இணைவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளமை தொடர்பில் இன்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வியாழேந்திரன் கூறியுள்ளதாவது,
“நான் மக்களின் ஆணையினாலேயே நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு செய்யகூடிய சேவைகளை செய்துள்ளேன். அதனை மக்களும் நன்கு அறிவார்கள்.
மேலும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது தொடர்பில் வெறும் பேச்சுக்களால் மாத்திரம் முடியாது. அதனை செயற்படுத்த வேண்டும்.
அந்தவகையில் மக்களுக்கு எதனை செய்வது சிறந்தது என்பது தொடர்பில் நன்கு அறிவேன். ஆகையால் எனது அரசியல் செயற்பாடுகள் அனைத்தும் மக்களை கருத்திற் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றது.
இதனால் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதற்கு எனக்கு விருப்பமில்லை. அதற்கு காரணம் கூட்டமையுடன் இணைந்து செயலாற்றிய காலப்பகுதியில் எமது மக்களுக்கு வேண்டிய தேவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு எனக்கு இருக்கின்றது.
ஆகையால், கூட்டமைப்பின் பெயரில் மக்களிடம் சென்று வாக்கு கேட்க விருப்பமில்லை. மேலும் கூட்டமைப்புடன் இணைவதாக கூறுவதில் எந்ததொரு உண்மையும் இல்லை” என வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.