தமிழகத்தை புரட்டியெடுத்த கஜா!- உயிரிழப்பு 49ஆக உயர்வு!
தமிழகத்தை புரட்டியெடுத்த கஜா புயலை அடுத்து ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49ஆக உயர்வடைந்துள்ளது.
உயிரிழந்தவர்கள் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் கோரத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல் பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. அதுமாத்திரமின்றி கட்டடங்களின் கூரைகளும் தூக்கியெறியப்பட்டுள்ளன. இதேவேளை, வீதிகளின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் புயலில் தூக்கியெறியப்பட்டன.
வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்ட நிலையில், புயல் பாதிப்பிற்குள்ளான பகுதிகளின் சீரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, புயல் தாக்கம் காரணமாக ஏராளமான ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளதுடன், கடற்கரைகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.