எம்மை நாமே அழிக்கும் துர்ப்பாக்கிய நிலை இனிமேலும் நடக்கக்கூடாது!
எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது என முன்னாள் வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மக்கள் பேரவையின் யாழ்.அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எவ்வாறு எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடையப்போகிறோம் என்பவற்றைக் கருத்தில் கொண்டு கடமையாற்ற வேண்டிய காலகட்டத்தில் நாம் இன்று நிற்கின்றோம்.
எமக்கிடையே பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் நாம் முரண்பட்டுக் கொண்டு சண்டையிட்டுக்கொண்டு எம்மை நாமே அழிக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட நாம் இனிமேலும் இடமளிக்கமுடியாது.
சில சக்திகள் எம்முள் முரண்பாடுகளை முன்னெடுக்க மும்முரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது.
எமக்கு இடையிலான அரசியல் ரீதியான காழ்ப்புணர்வுகள் மற்றும் வன்முறையான முரண்பாடுகள் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்துக்கு எந்தளவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கின்றன என்பதை வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
மீண்டும் மீண்டும் எமக்குள்ளேயே குரோதங்களையும் விரோதங்களையும் வளர்த்துக்கொண்டு தொடர்ந்தும் எமக்குள் முரண்பட்டுக்கொண்டிருக்கும் நிலைமைகளுக்கு இடங்கொடாமல் எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கை அடிப்படையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு ஊடாகத் தேர்தல் அரசியலை பயன்படுத்திக்கொள்வதற்கு என்னுடன் கைகோர்க்குமாறு அழைக்கிறேன்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.