‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி இழப்பீடு அவசியம்!

‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி இழப்பீடு அவசியம்!

‘கஜா’ புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

‘கஜா’ புயலின் தாக்குதலால் தலால், வேதாரண்யம், மன்னார் குடி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஆகையால் புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம், மன்னார் குடி மற்றும் பட்டுக் கோட்டை பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து, அப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ,

“தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெருமளவு உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருந்தாலும் ‘கஜா’ புயலால் 51 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகளும், கல் வீடுகளும் சிதைவடைந்துள்ளது. ஆகையால் இம்மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய தேவைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்” என வைகோ குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று தே.மு.தி.க தலைவர் விஜய காந்த், ச.ம.க தலைவர் சரத் குமார், ம.ம.க தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை செயற்பாடுகளுக்கு பாராட்டை தெரிவித்ததுடன் ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2905 Mukadu · All rights reserved · designed by Speed IT net