கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அதிநவீன நோயாளர் காவுவண்டி
இன்று மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நடமாடும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு என வர்ணிக்கப்படும் பென்ஸ் ரக அதிநவீன நோயாளர் காவுவண்டி ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது , அண்மையில் மத்திய சுகாதார அமைச்சு வைத்தியசாலைகளுக்கென ஒரு தொகுதி அதி நவீன நோயாளர் காவுவண்டிகளை இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளுக்குப் பகிர்ந்தளிக்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.
இதன்பிரகாரம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உட்பட வடமாகாண வைத்தியசாலைகள் சிலவும் இந்த நோயாளர் காவுவண்டிகளைப் பெற்றிருந்தன.
எனினும் வடக்கில் உள்ள பிரதான பொது வைத்தியசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இந்த அதிநவீன வசதிகளுடன் கூடிய நோயாளர் காவுவண்டி எதுவும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அண்மையில் புதிதாகக் கடமையேற்ற பணிப்பாளர் கடந்த வாரம் நேரடியாக மத்திய சுகாதார அமைச்சிற்குச் சென்று பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையின் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகள் குறித்துக் கலந்துரையாடியதாகவும் இதன்பிரகாரம் மத்திய சுகாதார அமைச்சு உடனடியாகவே இந்த அதிநவீன நோயாளர் காவுவண்டியினை இன்று கிளிநொச்சிக்கு அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.