மாவீரர் நிகழ்வுகளுக்கு தடை கோரி மனுதாக்கல்!

மாவீரர் நிகழ்வுகளுக்கு தடை கோரி மனுதாக்கல்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை கோரி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் என்பதன் கீழ் கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனுவானது இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த மனு மீதான கட்டளை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் அறிவித்தார்.

கோப்பாயில் இராணுவத்தின் 512ஆவது படைத்தளம் அமைந்துள்ள (மாவீரர் துயிலும் இல்லம்) காணிக்கு முன்பாக உள்ள சிறிதரன் என்பவருடைய காணி துப்புரவு செய்யப்பட்டுள்ளது. அங்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.

அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. என கோப்பாய் பொலிஸார் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

மனுவில் எதிர் மனுதாரர் தொடர்பில் குறிப்பிடப்படவில்லையே? என்று மன்று கேள்வி எழுப்பியது. எந்த நபர் மீதும் குற்றச்சாட்டு இல்லை என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

அதனால் மனு மீதான கட்டளையை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழங்குவதாக நீதவான் அறிவித்து மனுவை ஒத்திவைத்தார்.

அத்துடன் பயங்கரவாத தடைச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும். அந்த அமைப்பில் இருந்து உயிரிழந்த உறுப்பினர்களை நினைகூருவதற்காக மாவீரர் கடைப்பிடிக்கப்படுகிறது.

எனவே மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடுக்கும் வகையில் கட்டளை வழங்க வேண்டும் என பொலிஸார் மனுவில் கேட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net