அயோத்தியில் பேரணி – 144 தடையுத்தரவு பிறப்பிப்பு!

அயோத்தியில் பேரணி – 144 தடையுத்தரவு பிறப்பிப்பு!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி இந்து அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் பேர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அயோத்தியை நோக்கி பேரணி நடத்தவுள்ளனர்.

பா.ஜ.காவின் அறிவிப்பின் படி பிரதமர் மோடி தலமையில் அயோத்தியில் மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்ட ராமர் கோயில் கட்டும் பணிகளில் ஏற்பட்ட காலதாமதத்தால் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இவற்றை விரைவாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டதையடுத்து இந்து அமைப்புகள் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி,ஹெச்.பி உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், மீண்டும் அசாதாரணமான சூழல் ஏற்படும் என்று எச்சரித்து ராமர் கோயில்கட்ட வலியுறுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான இந்துத்துவா தொண்டர்கள் அயோத்தியை நோக்கி சுமார் இரண்டு லட்சம் பேர் நாளை அயோத்தியை அடைய உள்ளனர்.

இதனால் அயோத்தியில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் போரணியை கட்டுப்படுத்த பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சுரேந்திர சிங் கூறியகருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது

அதில் அவர், “அயோத்தியில் என்ன விலை கொடுத்தாவது ராமர் கோயிலை கட்டுவோம். இதற்காக எதையும் சந்திக்க தயார். ஏனென்றால் இது நம்பிக்கை சார்ந்த விஷயம். சட்டத்தையும், அரசியலமைப்பையும் விட மேலானது.

நாளை 10 ஆயிரம் ஆதரவாளர்களுடன் நான் அயோத்திக்கு செல்வேன். அங்கு சட்டத்தை மீறும் நிலை ஏற்படும் பட்சத்தில் 1992ஆம் ஆண்டு அயோத்தியில் மக்கள் சட்டத்தை மீறியதை போல மீண்டும் மீறுவோம். அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த கருத்தானது தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவையில் ராமர்கோயில் கட்டுவது தொடர்பான சட்டமூலத்தை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களவையில் சட்டமூலம் நிறைவேறுவதில் தடை ஏற்பட்டால், அவசர சட்டம் பிறப்பிக்கவும் மத்திய அரசு வியூகம் வகுத்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் இதன் முதல் கட்டமாக நாளை 25ஆம் திகதி அயோத்தி, நாக்பூர், பெங்களூர் ஆகிய 3 நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net