அரசியல் இலாபத்திற்காக மாவீரர் தினத்தை குழப்பாதீர்கள்: ஏற்பாட்டுக் குழு வேண்டுகோள்!
தேசத்தின் விடுதலைக்காக மரணித்த மாவீரர் தின நிகழ்வுகளை குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக குழப்புவதை தவிர்க்குமாறு, மன்னார் மாவீரர் தின ஏற்பாட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ள மாவீரர் தின நினைவேந்தல்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது மாவீரர் தின ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மாவீரர் தின நிகழ்வுகளை மிகவும் சிறப்பான முறையில் எழுச்சிபூர்வமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே, விடுதலைக்காக மரணித்த வீரர்களினுடைய நினைவு தினத்தை அரசியல் நோக்கத்தோடோ அல்லது குறுகியகால அரசியல் நோக்கத்திலோ குழப்புவதற்கான முயற்சிகளை கைவிடுமாறு அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
தேசத்தின் விடுதலைக்காக மரணித்த வீரர்களின் உன்னதமான தியாகத்திற்கும், அவர்களுடைய அர்ப்பணிப்பிற்கும் மதிப்பளித்து இப்புனித தினத்தை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” எனத் தொிவித்தார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் மாவீரர் தின ஏற்பாட்டுக்குழு சார்பாக மன்னார் நகர முதல்வர் ஞ.அன்ரனி டேவிட்சனும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.