சர்வதேசத்தின் ஊடாகவே தீர்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!
தற்போதைய இலங்கை சூழ்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் தீர்வை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் கவனம் செலுத்த வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இன்றுடன் 625 ஆம் நாளினை எட்டியுள்ளதென காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எமது பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை பெற்றுத்தருமென நம்பி தொடர்ந்து ஏமாற்றம் மாத்திரமே அடைந்துள்ளோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை தங்களது பிள்ளைகளை எப்படியாவது கண்டுபிடிக்க முடியுமென்ற நம்பிக்கை மற்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வதற்காகவே நாம் இப்போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் இவ்விடயத்தில் அரசாங்கம் நம்பிக்கையான நடவடிக்கைகளை எதனையும் மேற்கொள்ளவில்லை.
ஆகையால் சர்வதேசம் இவ்விடயத்தில் விரைவாக தலையிட்டு எமது பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டுமென காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வலியுறுத்தியுள்ளனர்.