யாழ் நாக விகாரைக்குள் இந்து ஆலயம் ; பிரதம விகாராதிபதி!
இன நல்லிணக்கத்தின் அடையாளமாக யாழ்ப்பாணம், நாக விகாரை வளாகத்துக்குள் ஆகம விதிமுறைகளுக்கு அமையக் கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயமொன்றை நிர்மாணிக்கின்ற வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகப் பிரதம விகாராதிபதி மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், சாந்தி, சமாதானம் ஆகியவை கட்டி எழுப்பப்பட வேண்டும்.
மேலும் உண்மையான பௌத்தர்கள் இவற்றை நேசிப்பதுடன் அதனைக் கட்டியெழுப்புவதற்கு இதய சுத்தியுடன் உழைக்கின்றார்கள்.
அந்தவகையில் நான், யாழ்.நாக விகாரையின் பிரதம விகாராதிபதியாக இருந்து இன நல்லிணக்கத்துக்கான உறவுப் பாலமாக செயற்பட்டு வருகின்றேன்.
எமது நல்லிணக்க வேலைத் திட்டத்தின் முக்கிய அம்சமாக நாக விகாரை வளாகத்துக்குள் கோபுரங்களுடன் கூடிய இந்து ஆலயமொன்றை ஆகம விதி முறைகளுக்கு அமைய நிர்மாணித்து வருகின்றோம்.
இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடலொன்றிலும் ஈடுபட்டுள்ளோம். மேலும் இந்து- பௌத்த சங்க தலைவர் தர்மலிங்கம் லோகேஸ்வரன் உள்ளிட்ட சிலரும் எமது முயற்சிக்கு உறுதுணையாக உள்ளார்கள்.
இதேவேளை நாக விகாரைக்குள் ஏற்கனவே பரிவார மூர்த்திகளாக கணபதி, அம்மன், விஷ்ணு, கந்தன் போன்ற இந்து தெய்வங்கள் வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்து உள்ளோம்.” என மீகஹ ஜந்துரே ஸ்ரீவிமல தேரர் தெரிவித்துள்ளார்.